Last Updated : 25 Feb, 2024 10:49 PM

 

Published : 25 Feb 2024 10:49 PM
Last Updated : 25 Feb 2024 10:49 PM

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: அடிக்கல் நாட்டுகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்

படம்: எக்ஸ்

திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட நாளை (பிப்.26) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் மட்டும் 222 கி.மீ பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் 90 கி.மீ., ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ., தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது. இந்த பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என வட மாவட்ட விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் பாலாற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்று கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக அம்மாநில வனத்துறை அமைச்சர், செய்தியாளர்கள் சந்திப்பில் ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தகவல் தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழக பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இனி கிடைக்க வாய்ப்பில்லாததால் ஆந்திர அரசின் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, 2 வழக்குகள் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது. இது தவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராக தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாக பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்து, ஆந்திர அரசு புதிதாக மேலும் ஒரு தடுப்பணை கட்ட ஏற்பாடுகள் செய்து வருவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவது மட்டுமின்றி தமிழக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கும் செயலாக உள்ளது. இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களை திரட்டி புதிய அணைக்கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x