Last Updated : 25 Feb, 2024 01:37 PM

1  

Published : 25 Feb 2024 01:37 PM
Last Updated : 25 Feb 2024 01:37 PM

பாஜகவினர் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற துடிக்கின்றனர்: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், பாஜகவினர் அதனை மாற்ற துடிக்கின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் 'அரசியலமைப்பு சட்டமும் தேசிய ஒருமைப்பாடும்' என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அந்த மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றியதாவது:

பாபாசாகேப் அம்பேத்கர் கடுமையாக உழைத்து இந்த உன்னதமான அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார். இதனை அவர் பட்டியலின மக்களின் நன்மைக்காக மட்டும் எழுதவில்லை. ஆனால் பாஜகவினர் இந்த அரசியலமைப்பு சட்டம் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரியது என பொய் பிரச்சாரம் செய்துவருகிறனர். இந்த அரசியலமைப்பு சட்டம் அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை நிலைநாட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. இந்த தத்துவத்துக்கு எதிரானவர்கள் அதனை அழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை பேசுகிறது. சமூக, பொருளாதார, அரசியல் அதிகார ஏற்றதாழ்வுகளை ஒழிக்க முயல்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கர் பல்வேறு தரப்பினருடன் போராடி ச‌மத்துவத்தை வலியுறுத்தும் இந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார். ஆனால் பாஜகவினர் அதனை மாற்ற வேண்டும் என பாஜகவினர் துடிக்கிறார்கள். சமத்துவமின்மையை விரும்புவர்களால் நாட்டுக்கே ஆபத்து நேரிடும். அவர்களை அதிகாரத்தில் அகற்ற வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், இந்த நாட்டின் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். அதனை மாற்ற துடிப்போரை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் வாழ முடியாது. ஜனநாயகமும், சமத்துவமும் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமானால் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே தேவை.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

இந்த அரசியலமைப்புச் சட்ட மாநாட்டில் சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர், பெஜவாடா வில்சன், பேராசிரியர்கள் சுக்தேவ் தோரட், அசுதோஷ் வர்ஷ்னி, ஜெயந்தி கோஷ் உள்ளிட்டோர் கருத்துரையாளர்களாக பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x