Published : 25 Feb 2024 05:43 AM
Last Updated : 25 Feb 2024 05:43 AM
ராய்ப்பூர்: வளர்ந்த இந்தியா, வளர்ந்த சத்தீஸ்கர் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிந்த சிலதிட்டங்களை தொடங்கி வைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.34,400 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு எண்ணங்கள் பெரியதாக இல்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தபோதிலும், நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்க அவர்கள் மறந்துவிட்டனர். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றஎண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் தோன்றவில்லை.
இப்போதுகூட காங்கிரஸ் கட்சியின் நிலையும், பாதையும் முன்புஇருந்ததைப் போலவே உள்ளது. வாரிசு அரசியல், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் சிந்திப்பதே இல்லை.
தங்களுடைய மகன், மகள்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையில் இருப்பவர்களால் நாட்டு மக்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவே முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை, நீங்கள் (மக்கள்) அனைவரும் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உங்கள் கனவுதான் என்னுடைய தீர்மானம். எனவேதான் நான் இன்று வளர்ந்த இந்தியா பற்றியும் வளர்ந்த சத்தீஸ்கர் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நம் நாட்டில் உள்ள ஏழைகள்,இளைஞர்கள் மற்றும் பெண்கள்சக்தியைக் கொண்டு வளர்ச்சிஅடைந்த சத்தீஸ்கரை வரும் காலங்களில் கட்டமைக்க முடியும். சத்தீஸ்கரை ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு, ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை நிறுத்தியது. ஆனால், புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு இத்திட்டத்தை விரைவுபடுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...