Published : 01 Feb 2018 04:10 PM
Last Updated : 01 Feb 2018 04:10 PM
2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விவசாயிகளுக்கான பட்ஜெட், எளிதாக தொழில் செய்யலாம் என்பதில் இருந்து எளிதாக வாழ்வதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் பொங்க புகழாரம் சூட்டினார்.
2018-19ம் நிதி ஆண்டுகான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் முடிந்தபின் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கானது. சாமானிய மக்களுக்கானது. நாட்டில் தொழில் செய்பவர்களுக்கான பட்ஜெட் என்று நினைக்கிறேன். எளிதாக தொழில் செய்யலாம் என்ற நோக்கத்தோடு மக்கள் எளிதாக வாழலாம் என்ற இலக்கை நோக்கியும் அரசும் இந்த பட்ஜெட் கவனத்தை திருப்பியுள்ளது.
இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்த்தக மக்கள் அதிகமாக சேமிக்க முடியும். 21ம் நூற்றாண்டுக்கான புதிய தலைமுறைக்கான கட்டமைப்பையும், சிறந்த உடல்நலக் காப்பீடையும் இந்த பட்ஜெட் அளிக்கிறது.
இந்த பட்ஜெட் கிராம மக்கள், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கும், விவசாயத்துக்கும் ரூ.14.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரீப் பருவத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை குறித்த நிதி அமைச்சர் அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிக மிக பயன் அளிக்கும்.
கிராமப்புற சந்தைகளுக்கு சாலை அமைத்தல், உயர் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகிய வசதிகளை கிராமங்களில் அமைக்கும் திட்டம் சிறப்பானது. பெண்களுக்கு இலவசமாக சமையல் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் திட்டம் மகத்தானது.
நாடுமுழுவதும் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கும் திட்டம், அனைவருக்கும் எளிதாக மருத்துவ வசதிகள் கிடைப்பதை அதிகப்படுத்துதல், பட்ஜெட்டின் சிறப்பு.
24 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படுவதன் மூலம் இளைஞர்கள் அதிகமாக மருத்துவப்படிப்புக்கு வருவார்கள். எங்கள் இலக்கு 3 நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்குவதாகும்.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும், பட்ஜெட் தயாரித்த அவரின் குழுவுக்கும் மீண்டும் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT