Published : 24 Feb 2024 03:59 PM
Last Updated : 24 Feb 2024 03:59 PM

ஆம் ஆத்மி - காங்கிரஸ் உறவை ‘திருடர்கள்’ உடன் ஒப்பிட்ட பாஜக எம்.பி மனோஜ் திவாரி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், "திருடனும் திருடனும் சகோதரர்களே" என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

மூன்று மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் டெல்லியில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தக் கூட்டணி குறித்து டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.மனோஜ் திவாரி, “காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் முந்தைய வாக்குறுதியை நினைவுபடுத்துகிறேன். திருடனும் திருடனும் சகோதர உறவுக்காரர்களே என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நடந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பேன் என பேசி வந்த அரவிந்த் கேஜ்ரிவால் இப்போது அவர்களின் காலடியில் விழுந்து கிடப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் வருத்தமடைந்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, இன்று ராகுல் காந்தியுடன் கேஜ்ரிவால் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினரும் வருத்தத்தில்தான் உள்ளனர்.

பாஜகவும் நரேந்திர மோடியும் மக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஒன்றுதான் என்று இன்று உறுதியாகியுள்ளதால் இனி டெல்லி மக்கள் அனைத்தையும் முடிவு செய்வார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதும் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, “காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும், ஆரம்பத்தில் இருந்தே இண்டியா கூட்டணியில் தான் ஓர் அங்கம் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவாக வலியுறுத்தி வந்தது.

இறுதியாக டெல்லி, ஹரியாணா, குஜராத், கோவா மற்றும் சண்டிகரில் இண்டியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கட்சி நலனை விட, நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். டெல்லி, ஹரியாணா, குஜராத், மற்றும் கோவாவில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எல்லா இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால், அமலாக்கத் துறையைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு முகமையும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என்று கூறப்பட்டது. சிபிஐ திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பும், இன்னும் சில நாட்களில் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x