Published : 24 Feb 2024 11:47 AM
Last Updated : 24 Feb 2024 11:47 AM
மக்களவைத் தேர்தலில் டெல்லி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த 2 மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது.
எனவே, மக்களவைத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இண்டியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தற்போது டெல்லி, குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இதற்காக 2 மாநிலங்களிலும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடவுள்ளது.
டெல்லியில் டெல்லி கிழக்கு, மேற்கு, தெற்கு, புதுடெல்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும். காங்கிரஸ் கட்சி வடமேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாண்டிசவுக் தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. கடந்த 2019 தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத்திலும் தொகுதிப் பங்கீட்டை ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. கோவா, சண்டிகர், ஹரியாணாவிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுதொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை களமிறக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் சண்டிகரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறங்கும். கோவாவில் ஒரு தொகுதியில் ஆம் ஆத்மியும், மற்றொரு தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடும் என்று தெரிகிறது.
ஹரியாணாவிலுள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி களமிறங்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மக்களவைத் தேர்தலில் கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் சண்டிகரில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை ஆம் ஆத்மி கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் காங்கிரஸ் கட்சி வேகம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தற்போது குஜராத், டெல்லியில் தொகுதிப் பங்கீட்டை அந்தக் கட்சி இறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பஞ்சாபில் உள்ள 13 இடங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அதைப் போலவே உத்தரபிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 17-ல் காங்கிரஸும், 63-ல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிடவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT