Published : 24 Feb 2024 07:15 AM
Last Updated : 24 Feb 2024 07:15 AM

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பரிதவிக்கும் இந்திய இளைஞர்கள்: மத்திய அரசு உதவ வேண்டுகோள்

ஹைதராபாத்: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த போரால் இரு தரப்பிலும் வீரர்களின் உயிரிழப்பு மிக அதிகம். ரஷ்ய ராணுவத்தில் சேர உள்நாட்டினர் யாரும் முன்வரவில்லை. தங்கள் கைவசம் உள்ள ராணுவ வீரர்களை உக்ரைன் போரில் இழக்க ரஷ்யா ராணுவமும் தயார் இல்லை.

இதனால் உக்ரைன் போரில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களை ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக தெரிகிறது. நேபாளத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரஷ்யா சென்று உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. அவர்கள் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. சிலர் போரில் ஊனமுற்று திரும்பியுள்ளனர்.

இதேபோல் இந்தியாவில் இருந்தும் இளைஞர்கள் பலர் ரஷ்யா சென்று உக்ரைன் போரில் சிக்கித்தவிக்கும் தகவல் தற்போது வீடியோ பிளாக்குகள் மூலம் தெரியவந்துள்ளது. பாபா என்ற வீடியோ பிளாக்கில் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் வேலை. ஆயுதம் ஏந்தி போரிட தேவையில்லை. பாதுகாப்பான வேலைவாய்ப்பு என்ற கவர்ச்சி விளம்பரம் செய்து, இந்தியர்கள் பலரை உக்ரைன் போரில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பலர் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களின் சேவை ‘தனியார்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சென்றவர்கள் எல்லாம் உக்ரைன் எல்லையில் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ள வீடியோவை தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர். தங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலி ஏஜென்டுகள் பலர் எளிதில் பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வருவது குறித்து ‘எஃப்2 பதான் விளாக்ஸ்’ என்ற வீடியோபிளாக்கில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதில் ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய இளைஞர் உக்ரைன் எல்லையில் எவ்வாறு கஷ்டப்படுகிறார் என்ற வீடியோவும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து ஹைதராபாத் எம்.பி ஓவைசி கூறுகையில், ‘‘எனக்கு தெரிந்து 12 இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் இருவர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள். 3 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உ.பி.யைச் சேர்ந்தவர். துபாயில் இருந்து செயல்படும் ஃபைசல் கான் என்பவர் ‘பாபா விளாக்ஸ்’ என்ற யூ டியூப் சேனல்நடத்துகிறார். அவர் இளைஞர்களை ஏமாற்றி ரஷ்யாவுக்கு அனுப்புகிறார். மும்பையில் இருந்து செயல்படும் சுபியன் மற்றும் பூஜா ஆகியோரும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகின்றனர். ரஷ்யாவிலிருந்து செயல்படும் ரமேஷ் மற்றும் மொயின் ஆகிய இரண்டு ஏஜென்டுகளும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x