Published : 24 Feb 2024 05:44 AM
Last Updated : 24 Feb 2024 05:44 AM

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ.13 ஆயிரம் கோடியில் திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பனாஸ் காசி சங்குல் பால் பதப்படுத்தும் நிலையம், எச்பிசிஎல் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் ஆலை, பட்டு ஆடைகளில் அச்சிடும் மையம், சிக்ரா விளையாட்டு அரங்கம், துப்பாக்கி சுடும் மையம் மற்றும் பல்வேறு சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தேசிய பேஷன் டெக்னாலஜி மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் முதியோர்களுக்கான தேசிய மையம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஆன்மிக சுற்றுலா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக வாராணசிஎம்.பி.யாக உள்ளேன். இந்த நகரம்என்னை பனாரஸியாகவே மாற்றிவிட்டது. புதிய காசியை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரம் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களுடன் தொடங்கியுள்ளது.

பனாஸ் பால் பண்ணையில், பசு வளர்ப்பில் ஈடுபடும் பெண்களை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு கிர் வகை பசுக்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பசுவும் 20 லிட்டர் வரை பால் தருகிறது. பெண்களை லட்சாதிபதிகளாக இந்த பசுக்கள் மாற்றியுள்ளன. நாட்டில் உள்ள சுயஉதவி குழு பெண்களுக்கு இது மிகப் பெரிய உற்சாகம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

16-ம் நூற்றாண்டை சேர்ந்த பக்தி இயக்க துறவி ரவிதாஸ் 647-வது ஜெயந்தியை முன்னிட்டு வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவதில் தீவிரமாக உள்ளனர். தலித்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கான நலத் திட்டங்களை அவர்கள் எதிர்க்கின்றனர். ஏழைகளின் நலன் என்ற பெயரில், தங்கள் குடும்பத்துக்காக அரசியல் செய்கின்றனர்.

ஆனால், பாஜக அரசு அனைவருக்காகவும் செயல்படுகிறது. பாஜக அரசின் திட்டங்கள் அனைவருக்குமானது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பதுதான் எனது அரசின் மந்திரம்.

பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்தால்தான் சமத்துவம் உருவாகும். அதனால்தான் சமூகத்தில் உள்ள அனைவரின் முன்னேற்றத்துக்காக எனது அரசு பாடுபடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பின்தங்கியவர்களை மனதில் வைத்தே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏழைகளின் மேம்பாட்டுக்காக மிகப் பெரிய திட்டங்கள் எல்லாம் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x