Last Updated : 24 Feb, 2024 07:52 AM

4  

Published : 24 Feb 2024 07:52 AM
Last Updated : 24 Feb 2024 07:52 AM

அகிலேஷ் யாதவுடன் உடன்பாட்டை அடுத்து மம்தா, கேஜ்ரிவாலுடன் காங்கிரஸ் மீண்டும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அகிலேஷ் யாதவுடனான உடன்பாட்டை அடுத்து மம்தா, அர்விந்த் கேஜ்ரிவாலுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

மத்தியில் தொடர்ந்து 3-வது முறை பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா எனும் பெயரில் கூட்டணி அமைத்தன. பிறகு இதன் நிறுவனரான, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். இதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி முன்வந்தது. இதுபோல ம.பி.யில் சமாஜ்வாதிக்கு ஒரு தொகுதி அளிக்க காங்கிரஸ் உடன்பட்டது. இதனால் இரு கட்சிகள் இடையே தேர்தல் உடன்பாடு இறுதியானது. இதனால் உ.பி.யில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் பங்கேற்க உள்ளார்.

இதையடுத்து டெல்லி மற்றும்பஞ்சாபின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த்கேஜ்ரிவால் ஏற்கெனவே காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது டெல்லியில் 7-ல் 1 தொகுதியையும் பஞ்சாபில் 13-ல் 3 தொகுதிகளையும் அளிக்கும் நோக்கில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.டெல்லி, பஞ்சாப் தவிர குஜராத்,ஹரியாணா, கோவா ஆகிய மாநிலங்களிலும் இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் காங்கிரஸுடன் கூட்டணி உறவை முறித்திருந்தார். இவரும் தற்போது காங்கிரஸுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார். மேற்கு வங்கத்துடன், அசாம் மற்றும் மேகாலயா குறித்தும் இரு கட்சிகளும் பேச உள்ளன. அசாம் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு தொகுதியை மம்தா கேட்கிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, “கடந்த 2019 மக்களவை தேர்தலில் மேகாலயாவின் தூரா தொகுதியில் எங்களுக்கு 28%, காங்கிரஸுக்கு 9% வாக்குகள் கிடைத்தன. அசாமில் 2 தொகுதிகளில் நாங்கள் காங்கிரஸை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தோம். அங்கு ஒரு தொகுதியையாவது காங்கிரஸ் எங்களுக்கு அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைப்பது எங்கள் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

மற்ற கட்சிகள்: பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸுக்கு நீண்டகால கூட்டணி நட்பு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் மாநிலக் கட்சிகளுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடர்கிறது. எனவே, இண்டியா கூட்டணி வலுப்படும் சூழல் உருவாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x