Last Updated : 08 Feb, 2018 02:09 PM

 

Published : 08 Feb 2018 02:09 PM
Last Updated : 08 Feb 2018 02:09 PM

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ப.சிதம்பரம் வீட்டில் இருந்து ரகசிய ஆவணம் கண்டுபிடிப்பு

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சிபிஐ ரகசிய அறிக்கையை கண்டுபிடித்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.600 கோடி அளவிலான அன்னிய முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சகம் நேரடியாக அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேலான தொகைக்கு பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க முடியும். ஆனால், இதை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகின்றன.

இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாகவும், கட்டணமும் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் டெல்லி, சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் வீடுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது எந்தவிதமான ஆவணமும் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த சீல்வைக்கப்பட்ட அறிக்கையில், மிகவும் ரகசியம் வாய்ந்த ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 13ம் தேதி டெல்லி ஜார் பாக் பகுதியில் சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபஐயின் ரகசிய அறிக்கையை அமலாக்கப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் யாரும் கையொப்பம் இடவில்லை, அதாவது சிபிஐ தரப்பிடம் இருந்து ரகசியமாக வாங்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரகசிய ஆவணத்தை அமலாக்கப்பிரிவு சிபிஐக்கு அனுப்பி ஆய்வு செய்யக் கோரியது. இந்த அறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x