Published : 22 Feb 2024 09:38 PM
Last Updated : 22 Feb 2024 09:38 PM
நிதிஷ் குமார் முழுமையாக விலகல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி முடிவு என பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி ஆட்டம் கண்டு வந்த நிலையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இண்டியா கூட்டணிக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த மீட்சியின் பின்னணி என்ன?
டெல்லி நிலவரம் என்ன? - சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அப்போது ஒட்டுமொத்தமாக அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணியைவிட்டு வெளியேறியதாக கருத்துக்கள் சொல்லப்பட்டது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால், “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கூட்டணி முறிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் முழுமையாக இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை” என விளக்கமளித்தார்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்திருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில், 3 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸுக்கு கிழக்கு மற்றும் வடமேற்கு டெல்லி மக்களவைத் தொகுதிகளில் ஒதுக்கப்படலாம் என என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில், அவற்றைக் கைப்பற்ற இண்டியா கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. நீண்ட நாட்களாக தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி - 4, காங்கிரஸ் - 3 தொகுதிகள் என்னும் நிலைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச நிலவரம் என்ன? - உத்தரபிரதேச மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி பிரதான கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில், அங்கு காங்கிரஸ் - சாமஜ்வாதி + கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி + கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடுகளில் நிலவிய மோதல் போக்கை தவிர்த்து தொகுதிகளை உறுதி செய்வதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முக்கியப் பங்காற்றியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில், ராகுல் காந்தி அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார், அதே நேரத்தில் சோனியா காந்தி தனது ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இப்போது, சோனியா காந்தி மாநிலங்களவைப் பதவிக்கு சென்றிருக்கும் நிலையில், பிரியங்கா காந்தி இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் சொல்லப்பட்டு வருகிறது.
சீட் பங்கீடு முடிவடைந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நியாய யாத்திரை நடத்தும் ராகுல் காந்தியுடன் இணைந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பயணம் மேற்கொள்வார் என சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில், பாஜக - 62 இடங்களிலும், பகுஜன் சமாஜ் - 10 இடங்களிலும், சமாஜ்வாதி 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி சார்பாக சோனியா காந்தி மட்டுமே இம்மாநிலத்தில் வெற்றி பெற்றார். இம்முறை, அதிக இடங்களில் வெற்றி பெற இண்டியா கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே, இண்டியா கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், முக்கியமான மாநிலங்களாகக் கருதப்படும் டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்திருப்பது அக்கூட்டணிக்கு சற்றே ஆறுதலை ஏற்படுத்துயுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT