Published : 22 Feb 2024 02:48 PM
Last Updated : 22 Feb 2024 02:48 PM
புதுடெல்லி: கரும்பு விலையில் வரலாற்று உயர்வு விவசாயிகள் நலனுக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை காட்டுவதாக பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று தொடர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டிலுள்ள அனைத்து விவசாய சகோதர, சகோதரிகளின் நலன்கள் தொடர்பான ஒவ்வொரு தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் எங்களின் அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் அடிப்படையில் கரும்பு கொள்முதலில் வரலாற்று விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2024 -25 ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதலின் போது கரும்பு ஆலைகள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு பின்னர் வெளியான அதிகாரபூர்வ அறிக்கையில், “புதிய எஃப்ஆர்பி கரும்பு விவசாயிகளுக்கான செழிப்பை உறுதி செய்யும். ஏற்கனவே உலகில் கரும்புக்கு அதிகமான விலையை இந்தியா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உள்நாட்டு நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை வழங்குவதை அரசு உறுதிசெய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவு குறித்த மற்றொரு பதிவில், “தேசிய கால்நடை இயக்கம் தொடர்பான முடிவு தீவன உற்பத்தி மற்றும் இன பாதுகாப்பில் ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளை தொழில் முனைவோருக்கு வழங்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை இயக்கத்தை மத்திய அரசு நேற்று மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, குதிரை, கழுதை மற்றும் ஒட்டகம் தொழில்முனைவை நிறுவுவதற்காக தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தயாரிப்பில் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் பங்களிப்பை ஈர்க்கும் வகையில் விண்வெளி துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட பதிவில் பிரதமர், “வளர்ச்சி மற்றும் புதுமைக்கான சுற்றுப்பாதைக்கு வழிவகுக்கும் வகையில் எங்களது அரசு வாய்ப்புகளின் உலகிற்கு பாதையமைக்கும் வகையில் விண்வெளித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டு திட்டத்தை புதுப்பித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT