Published : 22 Feb 2024 11:41 AM
Last Updated : 22 Feb 2024 11:41 AM
புதுடெல்லி: ஐஸ்வர்யா ராய் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவதூறாக பேசியிருப்பதாக சாடியுள்ள கர்நாடகா பாஜக, அவர் கன்னடர்களை அவமதித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஐஸ்வர்யா ராயை இழிவுபடுத்தியதன் மூலம் ராகுல் காந்தி தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா பாஜக அதன் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியர்களின் தொடர் நிராகரிப்பால் விரக்தி அடைந்துள்ள ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளமான ஐஸ்வர்யா ராயை இழிவுபடுத்தும் புதிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பூஜ்ஜிய சாதனைகளைக் கொண்ட நான்காவது தலைமுறை வாரிசு தற்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது அவதூறு பரப்பி வருகிறார்.
சித்தராமைய்யா அவர்களே, உங்களுடைய தலைவர் சக கன்னடியர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். நீங்கள் உங்களின் கன்னட பெருமையை காப்பாற்றுவீர்களா, இத்தகைய அவமரியதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள அமைதியாக இருப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ஜன.22-ம் தேதி நடந்த ராமர் கோயில் திறப்பில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டதற்கு எதிராக ராகுல் காந்தி பேசிய வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளது.
முன்னதாக, பிரயாக்ராஜில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி ராமர் கோயில் திறப்பு குறித்து பேசினார். அப்போது அவர், “ராமர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவைப் பார்த்தீர்களா? அங்கு ஒரே ஒரு ஓபிசி முகம் தான் இருந்ததா? அங்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் நரேந்திர மோடி இருந்தனர்?” என்று பேசியிருந்தார்.
கடந்த ஜன.22ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள் கலந்து கொண்டனர். என்றாலும் இந்த நிகழ்வை பாஜக அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விழாவினைப் புறக்கணித்தன. ராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழாவில் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா ராகுல் காந்தியின் கருத்து குறித்து பிரியங்கா காந்தியின் மவுனம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், “ராகுல் காந்தி அரசியலில் இல்லாத ஐஸ்வர்யா ராய் குறித்து பெண் வெறுப்பு கருத்துக்களை கூறியுள்ளார். பிரியங்கா காந்தி ஏன் மவுனமாக இருக்கிறார்? அவரும் வெட்கப்படுகிறாரா? இந்தக் கருத்துக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி ஏன் அமைதி காக்கிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT