Published : 22 Feb 2024 10:32 AM
Last Updated : 22 Feb 2024 10:32 AM

இரண்டு நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டம் நிறுத்தம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

நேற்று (பிப்.21) விவசாயிகள் போராட்டத்தின்போது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்ட காட்சி

புதுடெல்லி: கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று (வியாழக்கிழமை) அளித்தப் பேட்டியில், “ஹரியாணா மாவட்டம் ஷம்பு எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை. துணை ராணுவப் படையினரைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாங்கள் ஏற்கெனவே எங்களது டெல்லி சலோ பேரணி அமைதி வழியில் தான் நடைபெறும் என்று உறுதிபடச் சொல்லியிருந்தோம். ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் இளைஞர்கள் முன்னேற வேண்டாம் தலைவர்கள் மட்டும் டெல்லி நோக்கிச் செல்வோம் என்று கூறியிருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தையில் இருந்து மத்திய அரசு தரப்பினர் ஓடிவிட்டனர். அப்போது தான் எங்களுக்கு அந்தத் துயரச் செய்தி வந்தது. ஷம்பு எல்லையில் 23 வயதான சுபாகரன் சிங் தலையில் குண்டடிபட்டு இறந்தார் என்று தெரிந்தது. மேலும் 3 பேர் படுகாயமடைந்ததையும் அறிந்தோம்.

இந்தச் சூழலில் இரண்டு நாட்கள் டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். இப்போதைக்கு இங்கேயே (ஹரியாணாவில்) போராட்டம் நடைபெறும். நிலவரத்தை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்போம். ஏனெனில் மிகுந்த வேதனைக்குரிய சம்பவங்கள் பல நடந்துவிட்டன.

பேரணியில் வெறும் கைகளோடு நடந்து சென்ற விவசாயிகள் மீது ரப்பர் புல்லட்டுகள் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு விவசாயியை சாக்கில் கட்டி அவரது கால்களை உடைத்து வயல்வெளியில் வீசியுள்ளனர். விவசாயிகளின் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். எங்கள் மீதான இந்த வன்முறையை ஒட்டுமொத்த நாடும், ஏன் இந்த உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் போக்கு மிகவும் தவறானது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தென் இந்தியா என அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x