Published : 22 Feb 2024 05:54 AM
Last Updated : 22 Feb 2024 05:54 AM
புதுடெல்லி: புகழ்பெற்ற சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
ஃபாலி நாரிமன் மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியை தொடங்கினார், பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். கடந்த 1972-ம் ஆண்டு இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ஆனால் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு நாரிமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நாரிமன் பதவி வகித்துள்ளார்.
இவரது சட்டப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1991-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2007-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித் துள்ளது.
ஃபாலி நாரிமன் தனது நீண்ட பணிக் காலத்தில் போபால் விஷ வாயு வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதிட்டுள்ளார். பிரபல வழக்குகள் பலவற்றை கையாண்டு கவனம் ஈர்த்துள்ளார்.இவரது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாலி நாரிமன் மறைவுக்கு சட்டத் துறையினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபாலி நாரிமன் மிகச் சிறந்த சட்ட சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருவர். சாதாரண குடிமக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவால் மன வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு எனது இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT