Published : 22 Feb 2024 05:47 AM
Last Updated : 22 Feb 2024 05:47 AM
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக ஆராய்ந்து வரும் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் பாஜக தனது கருத்தை கூறியுள்ளது. இதில், முதலில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கலாம். பிறகு அதனுடன் உள்ளாட்சி தேர்தலை இணைக்கலாம் என்று கூறியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் இக்குழுவின் தலைவர் ராம் நாத் கோவிந்த் உறுப்பினர்கள் என்.கே.சிங், சஞ்சய் கோத்தாரி ஆகியோரை நேற்று சந்தித்து எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உயர்நிலைக் குழுவுடன் பாஜக உறுப்பினர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
பொது வாக்காளர் அட்டை: ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை என்ற யோசனையை பாஜக ஆதரிக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் எப்போதும் அமலில் இருப்பதால் நல்ல நிர்வாகத்தை அது பாதிக்கிறது. அடிக்கடி தேர்தல் நடத்துவது, அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இது ஊழலுக்கு காரணமாக உள்ளது.
தேர்தல் பணியில் பாதுகாப்புப் படையினர், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் நிர்வாகஅதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் பணி பாதிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முதலில் ஒருங்கிணைக்கலாம். பிறகு அதனுடன் உள்ளாட்சி தேர்தலை இணைக்கலாம் என நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதற்கு ஒருமித்த கருத்தும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தமும்தேவை. தொகுதி மறுவரையறைக்கு பிறகு ஒரே தேர்தலுக்கான நடவடிக்கைகளை தொடங்கவேண்டும். இவ்வாறு ஜே.பி.நட்டாகூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT