Published : 21 Feb 2024 08:53 PM
Last Updated : 21 Feb 2024 08:53 PM
லக்னோ: காங்கிரஸ் - சமாஜ்வாதி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சலசலக்கப்பட்டு வந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதாக இரு கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன. தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டின்படி, மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் உத்தம் படேல், அக்கட்சியின் தேசிய செயலாளர் ராஜேந்திர சவுத்ரி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் உ.பி. பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புதன்கிழமை கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இதன்படி ரேபரேலி, கான்பூர், அமேதி, வாரணாசி, காசியாபாத் உள்ளிட்ட 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். எஞ்சிய 63 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுன்றன. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் கஜுராஹோ தொகுதியில் போட்டியிடுவதாகவும், அம்மாநிலத்தின் மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸுக்கு ஆதரிப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
புறக்கணிப்பும் கேள்வியும் - முன்னதாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார். அமேதி, ரேபரேலியில் அவர் யாத்திரை மேற்கொண்டபோது அகிலேஷ் யாதவ் அந்த யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. இதனால் உ.பி.யில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டதாக சலசலப்புகள் எழுந்தன. அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்திக்கு இடையே சுமுக உறவு இல்லை என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்.21) செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், “நல்ல தொடக்கம். நன்மையாகவே முடியும். எந்தப் பிரச்சினையும் இல்லை. நிச்சயமாக கூட்டணி அமையும். விரைவில் எல்லாம் தெளிவுபடுத்தப்படும்” எனக் கூறினார். இந்நிலையில், இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த பின்னரே ராகுலின் யாத்திரையில் கலந்து கொள்வேன் என்று அகிலேஷ் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கியமான நகர்வு: மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில், சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் உறுதி செய்தது இண்டியா கூட்டணிக்கு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் மக்களவைத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளப் போவதாகக் கூறிவிட்ட நிலையில் உ.பி. கைநழுவக் கூடாது என்ற நெருக்கடி ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT