Published : 21 Feb 2024 06:16 PM
Last Updated : 21 Feb 2024 06:16 PM

உ.பி.யில் காங். கூட்டணி ‘உறுதி’ முதல் ஃபாலி நாரிமன் மறைவு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.21, 2024

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு: பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ‘டெல்லி சலோ’ பேரணியை புதன்கிழமை மீண்டும் தொடங்கியபோது அதைத் தடுத்து நிறுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை ஹரியாணா போலீஸார் வீசினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தில் 14 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் அவர்கள் குவிந்தனர். கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் பலரும் தங்கள் முகத்தில் கவசம் அணிந்திருந்தனர். சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்திருந்தனர்.

இதனிடையே, ஷம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில அகழ்வு இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்கள் உரிமையாளர்களுக்கு ஹரியாணா போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், “நாங்கள் யாரையும் தாக்கப்போவதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் செல்கிறோம். நாங்கள் டெல்லியில் மத்திய அரசை முடிவு எடுக்கச் சொல்லி வலியுறுத்துவோம். அரசாங்கம் எங்களை கொலைகூட செய்யட்டும். ஆனால், எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது" என்றார்.

5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு: வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. விவசாயத் தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “நாங்கள் விவசாயிகளை ஆதரிக்கிறோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கூறி இருக்கிறோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 முதல்வர் வெளியீடு: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டார். இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இக்கொள்கையினை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்: இபிஎஸ் கணிப்பு: “திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டுதான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை” - கமல்: “விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட மத்திய அரசு செய்யவில்லை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதியானதும் நல்ல செய்தி சொல்கிறேன்” அவர் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் காங். உடனான கூட்டணியை உறுதி செய்த அகிலேஷ்: காங்கிரஸ் - சமாஜ்வாதி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சலசலக்கப்பட்டு வந்த நிலையில், “காங்கிரஸுடன் விரிசல் ஏதுமில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நிறைவுபெறும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 17 சீட் வரை தர சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சிபிஐ விசாரணை’: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: உச்ச நீதிமன்றத்தின் மிகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும், அரசியல் சாசன சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான ஃபாலி எஸ்.நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.

ஃபாலி எஸ்.நாரிமன் தனது பணிக் காலத்தில் போபால் விஷவாயு வழக்கு, சேது சமுத்திரம் திட்டம் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர்.

ஃபாலி நாரிமனுக்கு புகழஞ்சலி: ஃபாலி நாரிமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஃபாலி நாரிமனும் ஒருவர். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “அவர் ஒரு மிகச்சிறந்த அறிவுஜீவி” என புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர ஆதரவாளர் ஃபாலி எஸ் நாரிமனின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் தனது கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அதிகாரத்தின் மீதான ஃபாலி நாரிமனின் அணுகுமுறை குறிப்பிடத்தகுந்தது. அதிகாரத்தை அதிகாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் அக்கறை காட்டினார். அதிகாரத்தின் முகத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு அறைகளை வழங்கியவர் அவர். ஒன்று, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடனேயே அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

அடுத்ததாக, கோத்ரா படுகொலைக்குப் பிறகு மோடியின் குஜராத் அரசாங்கத்தின் முகத்தில் அவர் விட்ட அறை. நாட்டின் மிகப் பெரிய வழக்கறிஞராக இருந்தும் அவர் கடைசி வரை அட்டர்னி ஜெனரலாக ஆகவில்லை” சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் எழுதியுள்ள புகழஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x