Published : 21 Feb 2024 04:58 PM
Last Updated : 21 Feb 2024 04:58 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பணியில் இருந்த சீக்கிய ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காலிஸ்தானி என அழைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்றார். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி அவர் செல்வதற்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற சுவேந்து அதிகாரி செவ்வாய்க்கிழமை சந்தேஷ்காலி சென்றார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை ‘காலிஸ்தானி’ என்று அழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் கோபமாக, "நான் தலைப்பாகை அணிந்திருப்பதால் நீங்கள் என்னை காலிஸ்தானி என்று அழைக்கிறீர்கள். இதுதான் உங்களின் வீரமா? தலைப்பாகை அணிந்து போலீஸ் வேலை செய்யும் யார் காலிஸ்தானியாக மாறியிருக்கிறார்கள்? இதுதான் உங்களின் நிலைப்பாடா?” என்று சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜகவினரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதுகுறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை பாஜக தலைவர் ஒருவர் காலிஸ்தானி பிரிவினைவாதி என்று கூறி அவமதித்துள்ளார். நான் இதைக் கண்டிக்கிறேன். அவர்களுக்கு வங்கத்தின் கலாச்சாரம் தெரியாது. நாங்களும் சந்தேஷ்காலிக்குச் செல்ல விரும்பினோம். தடுத்து நிறுத்தப்பட்டோம். இதற்கு எந்த ஓர் அதிகாரியும், அவரின் மதத்தின் அடிப்படையில் வேலை செய்கிறார் என்று அர்த்தம் இல்லை.
ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் தான் அவ்வாறு அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்க போலீஸாரை விமர்சிக்கின்றது. ஆனால் இதுபோன்று விமர்சனங்களை நாங்கள் வைப்பதில்லை. இதற்காக பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், "பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை பாஜக தலைவர் காலிஸ்தானி எனக் கூறி அவமானப்படுத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாடு முழுவதிலும், நாட்டின் ஒற்றுமையில் நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஒருவரை அவரது சாதி, மதம், மொழி அடிப்படையில் அவமானப்படுத்துவது தவறு என அறிவர். பொதுவெளியில் பாஜக தலைவர், அவரை (ஐபிஎஸ் அதிகாரியை) அவ்விதம் அவமானப்படுத்தியது வெறுப்பின் வேர் எவ்வளவு ஆழமாக அவர்களுக்குள் வேரூன்றி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
பாஜக தலைவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் வேலையையும், அரசியல் சாசன எல்லையை மீறும் வேலையையும் அடிக்கடி செய்கிறார்கள். இந்த செயலை ஆம் ஆத்மி கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதற்காக பாஜக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "பாஜகவின் பிரித்தாளும் அரசியல் இன்று வெட்கமின்றி அரசியல் எல்லைகளைக் கடந்துள்ளது. பாஜகவினரைப் பொறுத்தவரை தலைப்பாகை அணியும் ஒவ்வொருவரும் காலிஸ்தானி. நாட்டின் தியாகங்கள் மற்றும் உறுதிப்பாட்டுக்காக போற்றப்படும் நமது சீக்கிய சகோதர சகோதரிகளின் நற்பெயருக்கு கலங்கம் கற்பிக்கும் இந்தச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேற்கு வங்கத்தின் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கு ஊறு விளைவிக்கும் எந்த செயல்மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT