Published : 21 Feb 2024 04:39 PM
Last Updated : 21 Feb 2024 04:39 PM
லக்னோ: காங்கிரஸ் - சமாஜ்வாதி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சலசலக்கப்படும் நிலையில், “காங்கிரஸுடன் விரிசல் ஏதுமில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நிறைவுபெறும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 17 சீட் வரை தர சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது. அதற்கான உத்தேசப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ரேபரேலி, கான்பூர், அமேதி, ஃபதேபூர் சிக்ரி, பான்ஸ்கான், சஹரான்பூர், பிரயாக்ராஜ், மகாராஜ்கஞ்ச், பனாரஸ், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாஹர், காசியாபாத், மதுரா, ஹத்ராஸ், பாராபங்கி, டியோரியா ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளது. இதில் ஹத்ரால் தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
புறக்கணிப்பும் கேள்வியும்? - இதற்கிடையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார். அமேதி, ரே பரேலியில் அவர் யாத்திரை மேற்கொண்டபோது அகிலேஷ் யாதவ் அந்த யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. இதனால் உ.பி.யில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்தன. அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்திக்கு இடையே சுமுக உறவு இல்லை என்றும் பேசப்படுகின்றன.
இந்நிலையில் இன்று (பிப்.21) செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், “நல்ல தொடக்கம். நன்மையாகவே முடியும். எந்தப் பிரச்சினையும் இல்லை. நிச்சயமாக கூட்டணி அமையும். விரைவில் எல்லாம் தெளிவுபடுத்தப்படும்” எனக் கூறினார். முன்னதாக, அவர் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிந்தபின்னரே ராகுலின் யாத்திரையில் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அந்த 17 தொகுதிகள்: உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 17 முதல் 19 தொகுதிகள் வரைத் தர சமாஜ்வாதி முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளின் மாநிலத் தலைமைகள் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்து அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஹத்ராஸ் தொகுதியைக் கேட்டுக் கொண்டிருக்க அதற்குப் பதிலாக சீதாபூரை ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளதாலும், காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கேட்ட நிலையில் அதிகபட்சமாக 19 தொகுதிகளைத் தர சமாஜ்வாதி முன்வந்துள்ளதாலுமே தொகுதி உடன்பாடு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் தற்போது ஊடகங்களில் சமாஜ்வாதியின் உத்தேச பட்டியலில் காங்கிரஸுக்கு ஹத்ராஸ் ஒதுக்கப்பட்டுள்ளதாகவே இருக்கிறது.
முக்கியமான நகர்வு: மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில், சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்வது இண்டியா கூட்டணிக்கு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் மக்களவைத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளப் போவதாகக் கூறிவிட்ட நிலையில் உ.பி. கைநழுவக் கூடாது என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
31 தொகுதிகளுக்கு அறிவிப்பு: காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும்விட்டது. நேற்று (பிப்.20) அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில் படான் தொகுதியில் இருந்து அகிலேஷின் உறவினர் சிவ்பால் யாதவ், வாரணாசியில் இருந்து சுரேந்திர சிங் படேல், கைரானாவில் இருந்து இக்ரா ஹசன், பரேலியில் இருந்து பிரவீன் சிங் ஆரோன், ஹமிர்பூரில் இருந்து அஜேந்திரா சிங் ராஜ்புட் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி 16 வேட்பாளர்களை அறிவித்தது. பிப்ரவரி 19 ஆம் தேதி 11 வேட்பாளர்களை சமாஜ்வாதி அறிவித்தது. இந்தச் சூழலில் ராகுலின் யாத்திரையையும் அகிலேஷ் புறக்கணித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மம்தா, பகவந்த் பாணியில் அகிலேஷும் போர்க்கொடி உயர்த்துவாரா என்ற விவாதங்களும் எழாமல் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT