Published : 21 Feb 2024 04:01 PM
Last Updated : 21 Feb 2024 04:01 PM
புதுடெல்லி: “சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏதோ ஒன்றை மறைக்க விரும்புகிறார்” என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. “தனது அரசியல் நற்பெயரைக் காப்பாற்ற பெண்களின் மரியாதையை மம்தா பணயம் வைக்கிறார்” என்று சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் மவுனம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "சந்தேஷ்காலி விவகாரம் மிகவும் தீவிரமானது. பெண்கள் மீதான தாக்குதல், அவமானகரமான நடத்தை மற்றும் பாலியல் வன்கொடுமை நமது சமூகத்துக்கும். ஜனநாகத்துக்கு அவமானம். மம்தா பானர்ஜி இன்னும் அதை ஏன் மறைக்கிறார்? ஒரு பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மம்தா எதை மறைக்க விரும்புகிறார். ஏன்? தன்னுடைய அரசியல் நற்பெயரைக் காப்பாற்ற பெண்களின் மரியாதையை பெண் முதல்வர் பணயம் வைக்கிறார். அவரது மனசாட்சி எங்கே மரணித்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மவுனத்தையும் ரவி பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "போராளிகள் ஏன் இப்போது மவுனமாக இருக்கிறார்கள்? ஒரு மார்க்சிஸ்ட் கட்சி பெண் தலைவர் அந்தப் பகுதிக்குச் சென்றார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால், சிபிஎம் அந்தச் சம்பவத்தை எதிர்த்து வெளிப்படையாக பேசவில்லை. ராகுல் காந்தியும் அமைதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் - இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சந்தேஷ்காலி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதன் பின்னணி என்ன? - முழுமையாக வாசிக்க > மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு நெருக்கடி - சந்தேஷ்காலியில் என்ன நடக்கிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT