Published : 21 Feb 2024 06:18 AM
Last Updated : 21 Feb 2024 06:18 AM
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை கட்டப்பட்ட நெடுஞ்சாலைகளில் 4 வழி மற்றும் அதற்கு மேற்பட்ட வழி நெஞ்சாலைகளின் பங்கு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 2023-24-ல் கட்டப்பட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 43% இந்தப் பிரிவின் கீழ் வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, “4, 6 மற்றும் 8 வழிச் சாலைகளின் பங்கு ஓராண்டுக்கு முன்பிருந்ததை விட 16% அதிகரித்து 3,297 கி.மீ. ஆக உள்ளது. இந்த நிதியாண்டில் எஞ்சிய 2 மாதங்களுக்கு பிறகு இந்த விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உள்ள சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் இரு வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல் மூலம் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் ஏற்கெனவே சாதனை படைக்கப்பட்டது.
தற்போது நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட வழிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டுமானத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
அரசு புள்ளி விவரத்தின்படி 2019-20-ம் ஆண்டில் இத்தகைய அகன்ற சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 2013-14-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது நான்கு மற்றும் அதற்கு மேல் வழிகள் கொண்ட நெடுஞ்சாலைகளின் வருடாந்திர கட்டுமான விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
அதாவது 2013-14-ம் ஆண்டில்4 மற்றும் அதற்கு மேல் வழிகள்கொண்ட சாலைகள் 1,332 கி.மீ.தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. 2022-23-ல் இது 4,635 கி.மீ. ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட வழிச் சாலைகள் 47 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உள்ளன. இதனை 2030-ம் ஆண்டில் 75 ஆயிரம் கி.மீ. ஆக உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் 2030-ல் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் குறைந்தபட்சம் இருவழிச் சாலைகளாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
பட்ஜெட் ஒதுக்கீட்டு உயர்வால்தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இத்தகைய வேகம் சாத்தியமாகியுள்ளது. 2013-14-ல் ரூ. 31,130 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு 2024-25-ல் ரூ. 2.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நெஞ்சாலை துறையில் ஒட்டுமொத்த முதலீட்டில் தனியார் துறை முதலீடும் உள்ளது. 2013-14-ல் ரூ. 59,135 கோடியாக இருந்த தனியார் முதலீடு 2023-24-ல் ரூ.2.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT