Last Updated : 21 Feb, 2024 06:46 AM

 

Published : 21 Feb 2024 06:46 AM
Last Updated : 21 Feb 2024 06:46 AM

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ரூ.5 கோடி செலுத்தவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-96-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ஜெயலலிதா காலமானார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்.அந்தத் தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று முன்தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக‌ உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, புகைப்படக்காரர், வீடியோகிராஃபர் ஆகியோர் முன்னிலையில் அவை ஒப்படைக்கப்பட வேண்டும். நகைகளைக் கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும். இதற்கான வங்கி வரைவோலையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி இவ்வழக்கின் அடுத்தகட்ட‌ விசாரணையை மார்ச் 6‍-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x