Published : 16 Feb 2018 11:02 AM
Last Updated : 16 Feb 2018 11:02 AM
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு?
எண் | மாநிலம் | நீரின் அளவு |
1 | கர்நாடகா | 284.75 டிஎம்சி |
2 | தமிழ்நாடு | 404.25 டிஎம்சி |
3 | கேரளா | 30 டிஎம்சி |
4 | புதுச்சேரி | 7 டிஎம்சி |
தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு:
எற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார். இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.
கர்நாடகாவுக்கு ஏன் கூடுதல் தண்ணீர்?
தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, "பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும் கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
அய்யாக்கண்ணு கருத்து:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, "தமிழகத்துக்கு தண்ணீரின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், அதேவேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும் தமிழகத்துக்கான நீர் பங்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பெற்றுத் தர வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
வழக்கு கடந்து வந்த பாதை..
கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,'' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.
காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று, "காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (வெள்ளி) காலை தீர்ப்பு வழங்கப்படும்'' என அறிவித்தது.
இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT