Published : 20 Feb 2024 08:24 PM
Last Updated : 20 Feb 2024 08:24 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் எதிர்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ் தனித்தனியே போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. இதன்மூலம் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து உ.பி.யிலும் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதைத் தடுக்க சுமார் 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தன. இண்டியா எனும் பெயரில் கூட்டணி அமைத்த கட்சிகளின் கூட்டங்கள், பிஹார், பெங்களூரூ மற்றும் மும்பையில் நடைபெற்றன. இதன்பிறகு இண்டியா கூட்டணியின் நிறுவனரான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, ஒன்றன்பின் ஒன்றாக இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டு வருகிறது.
பஞ்சாப், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இரண்டு மாநிலங்களிலும் தாம் தனித்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுடனான காங்கிரஸின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார்.
தற்போது இண்டியா கூட்டணியின் உத்தரப் பிரதேசத்தின் முக்கியக் கட்சியான சமாஜ்வாதியும் பிளவு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. நாட்டின் அதிகமான, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் ஒதுக்குவதாக சமாஜ்வாதி அறிவித்திருந்தது. பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, மேலும் 4 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் அளித்திருந்தார். இது, கடைசியாக இன்று 17 தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.
இதில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி, பாரபங்கி, சீதாபூர், கைஸர்கன்ச், வாரணாசி, அம்ரோஹா, சஹரான்பூர், கவுதம் புத் நகர், காஜியாபாத், புலந்த்ஷெஹர், பதேபூர் சிக்ரி, கான்பூர், ஹாத்ரஸ், ஜான்சி, பாக்பத் மற்றும் மஹராஜ்கன்ச் ஆகிவை இடம்பெற்றன. ஆனால், இதற்கு காங்கிரஸ் இசையவில்லை.
காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் நியாய யாத்திரை நடத்தி வருகிறார். இண்டியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டால், ராகுலின் நியாய யாத்திரையில் தாம் கலந்துகொள்வதாக அகிலேஷ் அறிவித்திருந்தார்.
ஆனால், 17 தொகுதிகளை விட ஒன்று கூடுதலாகக் கேட்டு காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதில், உத்தரப் பிரதேசத்தின் முஸ்லிம்கள் வாழும் தொகுதியான பிஜ்னோர் அல்லது முராதாபாத் இடம்பெற்றிருந்தன. இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிலை உருவாகி விட்டது. தாங்கள் தனித்துப் போட்டியிடப்போவதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இச்சூழலில், வட மாநிலங்களில் பிஹாரில் மட்டுமே இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிடுவதாகத் தெரிகிறது.
இதனிடையே, காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால், கூட்டணிப் பேச்சு இறுதிநிலை எட்டியதாகவும், எந்த நேரமும் சுமுகமாக முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மீதான கேள்வியை அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவிடம் எழுப்பியபோது அதற்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். எனினும், தனது இறுதி முடிவை எடுக்க சமாஜ் வாதி 3 நாள் அவகாசத்தை காங்கிரஸுக்கு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT