Published : 20 Feb 2024 05:54 PM
Last Updated : 20 Feb 2024 05:54 PM

இண்டியா கூட்டணியில் முடிவடையும் தருவாயில் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடையும் தருவாயில் உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழுவை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். அந்தக் குழு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவும் தீவிரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது முடிவுக்கு வரலாம்" என்று தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் சார்பில் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

குறிப்பாக, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேபோல், பஞ்சாபில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் அம்மாநில முதல்வருமான பகவந்த் மான் அறிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. சமாஜ்வாதி வழங்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் தான் பங்கேற்க வேண்டுமானால், அதற்குள்ளாக தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வர வேண்டும் என அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்துள்ளார்.

இண்டியா கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கே.சி.வேணுகோபாலின் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x