Published : 20 Feb 2024 05:15 PM
Last Updated : 20 Feb 2024 05:15 PM
சந்தேஷ்காலி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்குச் சென்று பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என்றும், சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்றும் கூறினார்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தேஷ்காலியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பட்டியலினத்தோர் (எஸ்சி) ஆணைய பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தலைமறைவான ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டம் நடைபெறுவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுவேத்து அதிகாரி, சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்றார். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி அவர் செல்வதற்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற சுவேந்து அதிகாரி இன்று சந்தேஷ்காலி சென்றார். அவருடன் பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ் உள்ளிட்டோர் சென்றனர்.
சந்தேஷ்காலியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பாஜக தலைவர்கள், அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்கள் கூறியவை அதிர்ச்சிகரமானவை. உடலை நடுங்கச் செய்பவை. உள்ளூர் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
சந்தேஷ்காலியில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அனைத்தும் காவல் துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் நடந்துள்ளது. நிலைமை முற்றிலும் பயங்கரமானது. அராஜகத்துக்கனா மிக மோசமான உதாரணம் இது. சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக இல்லாத நிலை உள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT