Published : 20 Feb 2024 05:22 PM
Last Updated : 20 Feb 2024 05:22 PM

“கொஞ்சம் பொழுது போகும்....” - தலைமை நீதிபதி பகடி @ சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்கு எண்ணும் வீடியோவை ஒளிபரப்பச் சொல்லி, “அனைவரும் இதனைக் கண்டு கொஞ்சம் பொழுது போக்கலாம்” என கிண்டல் தொனியில் பேசியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹிடம் நேற்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக் காட்சிகளை திரையிட உத்தரவிட்டார்.

அந்தக் காட்சி டிவியில் திரையிடப்பட்டபோது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “அந்த வீடியோவை நாம் அனைவரும் இப்போது பார்க்கலாம். அளவான பொழுதுபோக்கு எல்லோருக்குமே நல்லது. வீடியோவில் எந்த இடத்தில் சர்ச்சைக் காட்சி வருகிறது என்பதை மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால் நாம் அதனை மட்டும் காண்போம். இல்லாவிட்டால் மாலை 5.45 மணி வரை நாம் அந்த வீடியோவை மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும்” என்றார். நீதிபதி அவ்வாறு கூறு நீதிமன்றத்தில் லேசான சிரிப்பலை எழுந்தது.

ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி: தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், செல்லாதது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் செல்லத்தக்கதாக கருத்தில் கொண்டு மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணும்படி உத்தரவிட்டனர். அதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முந்தைய முடிவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி 3 வாரங்களில் விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சை உச்ச நீதிமன்ற தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x