Published : 20 Feb 2024 03:52 PM
Last Updated : 20 Feb 2024 03:52 PM
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வழக்கில், ”செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும். அனைத்து வாக்குகளையும் மீண்டும் எண்ணி, அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு தேசிய கவனம் பெற்றது.
இந்நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.
முன்னதாக, மேயர் பதவியை மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பூனம் தேவி, நேகா முஸ்வாத், குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்களும் 18-ம் தேதி மாலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவடேவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். இத்தகைய அரசியல் பரபரப்புகள் ஒருபுறம் இருக்க, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏற்படுத்தப்போகும் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT