Published : 20 Feb 2024 02:46 PM
Last Updated : 20 Feb 2024 02:46 PM

ஜம்மு காஷ்மீர் | ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். மேலும், ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

கல்வித்துறைக்கு ஊக்கம்: நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்தார். ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐடிடிஎம் கர்னூல், கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம்(ஐஐஎஸ்), மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இரண்டு நிரந்தர வளாகங்கள் - தேவ்பிரயாக் (உத்தராகண்ட்) மற்றும் அகர்தலாவில் (திரிபுரா) ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

ஐஐஎம் ஜம்மு மற்றும் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று ஐஐஎம் வளாகங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதுதவிர நாடு முழுவதும் கேந்திர வித்யாலயாவின் 20 புதிய கட்டடங்களையும், 13 புதிய நவோதயா வித்யாலயா கட்டடங்களையும் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் 5 கேந்திர வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் நவோதயா வித்யாலயாவுக்கான 5 பன்னோக்கு அறைகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

எய்ம்ஸ் ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நடவடிக்கையாக, ஜம்முவின் விஜய்பூர் (சம்பா) பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். 2019 பிப்ரவரியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், பிரதமரின் பின்தங்கிய மாநிலங்களில் மருத்துவ கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. ரூ. 1660 கோடிக்கும் அதிகமான செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, 720 படுக்கைகள், 125 இருக்கைகளுடன் மருத்துவக் கல்லூரி, 60 இருக்கைகளுடன் செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகள், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், இரவு தங்குமிட வசதி, விருந்தினர் இல்லம், அரங்கம், வணிக வளாகம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த அதிநவீன மருத்துவமனை, இதயம், இரைப்பை குடலியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல், உட்சுரப்பியல், தீக்காயங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 17 உயர் சிறப்பு பிரிவுகளில் நோயாளிகள் பராமரிப்பு சேவைகளை வழங்கும். இந்த நிறுவனத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, 20 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோயறிதல் ஆய்வகங்கள், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவை இருக்கும்.

ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம்: ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த புதிய முனையக் கட்டிடம், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் சுமார் 2,000 பயணிகள் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

புதிய முனைய கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பிராந்தியத்தின் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கட்டப்படும். இது விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தி, சுற்றுலா, வர்த்தகத்தை ஊக்குவித்து, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.

ரயில் திட்டங்கள்: பானிஹால் – காரி – சம்பர் – சங்கல்தான் (48 கிலோமீட்டர்) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா – சிருங்கர் – பானிஹால் – சங்கல்தான் பிரிவு (185.66 கிலோமீட்டர்) இடையேயான புதிய ரயில் பாதை உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு ரயில் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலாவது மின்சார ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கல்தான் ரயில் நிலையம், பாரமுல்லா ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் பிரிவின் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். மேலும், இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை டி -50 (12.77 கிமீ) கரி-சம்பர் இடையேயான இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ரயில் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைத் திட்டங்கள்: ஜம்முவையும், கத்ராவையும் இணைக்கும் தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் (44.22 கிலோமீட்டர்) உள்ளிட்ட முக்கிய சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஸ்ரீநகர் வட்டச் சாலையின் நான்கு வழிச்சாலையின் இரண்டாம் கட்டம், தேசிய நெடுஞ்சாலை 1-ல் ஸ்ரீநகர் – பாரமுல்லா – உரி இடையேயான 161 கிலோமீட்டர் தூரத்தை மேம்படுத்த 5 தொகுப்புகள், தேசிய நெடுஞ்சாலை-444-ல் குல்காம் புறவழிச்சாலை, புல்வாமா புறவழிச்சாலை கட்டுமானம் ஆகியவை இதில் அடங்கும். தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் நிறைவடைந்தவுடன், மாதா வைஷ்ணோ தேவியின் புனித ஆலயத்திற்கு யாத்ரீகர்கள் வருகை தருவதற்கு வசதியாக அமையும். ஸ்ரீநகர் வட்டச் சாலையின் நான்கு வழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்போதுள்ள சும்பல்-வயுல் தேசிய நெடுஞ்சாலை-1 ஐ மேம்படுத்துவது அடங்கும். 24.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பிரவுன்ஃபீல்ட் திட்டம், ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இது மனஸ்பல் ஏரி, கீர் பவானி கோயில் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, லடாக்கின் லேவுக்கான பயண நேரத்தையும் குறைக்கும்.

தேசிய நெடுஞ்சாலை 1-ல் ஸ்ரீநகர் – பாரமுல்லா – உரி இடையேயான 161 கிலோமீட்டர் நீளத்தை மேம்படுத்தும் திட்டம் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பாரமுல்லா, உரியின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். குவாசிகுண்ட் – குல்காம் – ஷோபியான் – புல்வாமா – பத்காம் – ஸ்ரீநகர் ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 444-ல் உள்ள குல்காம் புறவழிச்சாலை, புல்வாமா புறவழிச்சாலை இப்பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதி: ஜம்முவில் பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதியை உருவாக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ. 677 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த அதிநவீன தானியங்கி கிடங்கு, மோட்டார் ஸ்பிரிட், அதிவேக டீசல், சுப்பீரியர் மண்ணெண்ணெய், விமான டர்பைன் எரிபொருள், எத்தனால், பயோ டீசல், குளிர்கால தர அதிவேக டீசல் ஆகியவற்றை சேமிப்பதற்காக சுமார் 100,000 கிலோ லிட்டர் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.

பிற திட்டங்கள்: ஜம்மு-காஷ்மீர் முழுவதும் குடிமை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பொது வசதிகளை வழங்குவதற்கும் ரூ. 3150 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். சாலை திட்டங்கள், பாலங்கள், கிரிட் கட்டமைப்பு நிலையங்கள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பல பட்டப்படிப்பு கல்லூரி கட்டிடங்கள், ஸ்ரீநகரில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, நவீன நர்வால் பழ மண்டி, கத்துவாவில் மருந்து சோதனை ஆய்வகம் மற்றும் போக்குவரத்து தங்குமிடம் – கந்தர்பால், குப்வாராவில் 224 குடியிருப்புகள் ஆகியவை இதில் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஐந்து புதிய தொழிற்பேட்டைகள், ஜம்மு பொலிவுறு நகரத் திட்டத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கான தரவு மையம் / பேரிடர் மீட்பு மையம், ஸ்ரீநகரின் பரிம்போராவில் போக்குவரத்து நகர் மேம்பாடு, அனந்த்நாக், குல்காம், குப்வாரா, ஷோபியான், புல்வாமா மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் 62 சாலை திட்டங்கள், 42 பாலங்கள், போக்குவரத்து தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் - 2816 குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x