Published : 20 Feb 2024 10:49 AM
Last Updated : 20 Feb 2024 10:49 AM

ராகுல் யாத்திரை: அகிலேஷ் நிபந்தனை

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை, 37-வது நாளான நேற்று உத்தரபிரதேச மாநிலம் பாபுகஞ்ச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றனர். இதையடுத்து நேற்று இரவு அமேதியில் யாத்திரை நடைபெற்றது. இன்று ரேபரேலியில் யாத்திரை நடைபெறுகிறது.

இதையொட்டி, இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அகிலேஷ், அமேதி அல்லது ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார்கள். நாங்களும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளோம். இதில் முடிவு எட்டப்பட்டால்தான் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையில் பங்கேற்பேன்” என்றார்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க அகிலேஷ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இண்டியா கூட்டணியில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனாலும், ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் யாத்திரை மேற்கொண்ட போது, அதில் மம்தா பங்கேற்கவில்லை. இதனால் அகிலேஷ் யாதவின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சமாஜ்வாதியின் 2-வது வேட்பாளர் பட்டியல் சமாஜ்வாதி கட்சி நேற்று 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன்படி, பிரபல ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரி காஜிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காஜிபூர் முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் அன்சாரிக்கு குற்றவாளி என நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் எம்.பி. பதவியை இழந்தார்.

எனினும், கீழ் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் மீண்டும் எம்.பி-யாக தொடர்கிறார். ஹரேந்திர மாலிக் (முசாபர்நகர்), நீரஜா மவுரியா (அவோன்லா), ராஜேஷ் காஷ்யப் (ஷாஜ கான்பூர்), உஷா வர்மா (ஹர்தோய்), ராம்பால் ராஜ்வன்ஷி (மிஷ்ரிக்), ஆர்.கே.சவுத்ரி (மோகன்லால்கஞ்ச்), எஸ்.பி.சிங் படர் (பிரதாப்கர்), ரமேஷ் கவுதம் (பரைச்), ஷ்ரேயா வர்மா (கோண்டா) மற்றும் வீரேந்திர சிங் (சந்தவுலி) ஆகியோரும் 2-வது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 30-ம் தேதி 16 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டது. இதில், அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் (மெயின்புரி) உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x