Published : 18 Feb 2024 04:38 AM
Last Updated : 18 Feb 2024 04:38 AM
மியூனிக்: ஜெர்மனியின் மியூனிக் நகரில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா, வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதுவரை இருமுறை உலகப் போர்கள் நடைபெற்றுள்ளன. மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படக்கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டு கடந்த 1963-ம் ஆண்டில் ஜெர்மனியில் ‘மியூனிக் பாதுகாப்பு அமைப்பு' தொடங்கப்பட்டது. இதில் 70 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் ஜெர்மனியின் மியூனிக் நகரில் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மாநாடு நேற்றுதொடங்கியது. இதில் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கன், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், கிரேக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிகாஸ், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா, கனடா வெளியுறவு அமைச்சர் மெலைனி ஜோலி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அவர் நேற்று சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மையில் நடைபெற்ற வங்கதேச பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது வழிகாட்டுதலால் இந்தியா, வங்கதேச இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மியூனிக் பாதுகாப்பு அமைப்பின் மாநாட்டில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT