Published : 18 Feb 2024 04:34 AM
Last Updated : 18 Feb 2024 04:34 AM

20-ம் தேதி காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி: தீவிரவாதிகளின் ரகசிய சுரங்கங்களை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 20-ம் தேதி காஷ்மீர் செல்கிறார். இதையொட்டி காஷ்மீர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

பிரதமர் மோடி நாளை மறுதினம்காஷ்மீரின் ஜம்மு நகருக்கு செல்கிறார். அங்கு 85 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 124 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.3,161 கோடி ஆகும்.

குறிப்பாக ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிறைவு பெற்ற சாலை, ரயில் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதன்பிறகு ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ரகசிய சுரங்கம் தோண்டி இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவது வழக்கம். இதுபோன்ற ரகசிய சுரங்கங்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு காவல் துறை சார்பில் ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ரகசிய சுரங்கங்கள் இருக்கின்றனவா என்று தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகை காரணமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த சில நாட்களில் பூஞ்ச் எல்லைப் பகுதியில் 3 ட்ரோன்கள் கண்டறியப்பட்டன.

இதன்காரணமாக பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சம்பா, கதுவா, ஜம்மு பகுதிகளில் வீரர்கள்தீவிர சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராம்கர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், காவல் துறையினர் இணைந்து பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

விழா நடைபெறும் ஜம்முவின் மவுலானா ஆசாத் மைதானம் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x