Published : 17 Feb 2024 08:02 PM
Last Updated : 17 Feb 2024 08:02 PM
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி தேசிய பட்டியலின ஆணையம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்குப் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகள் - இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சந்தேஷ்காலி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதன் பின்னணி என்ன?
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிவதற்கு சந்தேஷ்காலிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக் கண்டறியும் குழு, கடந்த 15-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “சந்தேஷ்காலி பெண்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு கவனக்குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது” என்னும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் “திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்வார்கள். அப்போது அழகான பெண்கள் கண்ணில் பட்டால், குறிப்பாக திருமணமான இளம்பெண்கள் அல்லது சிறுமி இருந்தால், அவர்களைக் கட்சி அலுவலகத்திற்கு தூக்கிச் சென்று பாலியில் ரீதியில் துன்புறுத்துவார்கள். பல நாட்கள் அந்தப் பெண்களை அங்கேயே வைத்திருப்பார்கள்” என அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கின்றனர்.
ஷேக் ஷாஜகான் வீட்டில் விசாரணை மேற்கொள்ள வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஷாஜகான் தலைமறைவாக இருக்கிறார். அவர் ஊரில் இல்லாத நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் பேச தைரியம் வந்திருப்பதாக சந்தேஷ்காலி பெண்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தேசிய பட்டியலின ஆணையம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், “பட்டியலின மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 338-வது பிரிவின் கீழ் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும்” என்று பரிந்துரைத்திருப்பதாக அதன் தலைவர் அருண் ஹெல்தர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “நாட்டிலேயே பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கிறது. அரசு பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைப் பாதுகாக்காமல் குற்றவாளிகளைப் போல் நடத்தி, அவர்கள் மீதே மீண்டும் குற்றச்சாட்டு முன்வைத்திருப்பது கொடுமையானது” எனக் கூறியிருந்தார்.
சந்தேஷ்காலி விவகாரத்தைக் கையிலெடுக்கும் பாஜக - காங்கிரஸ்: கடந்த 16-ம் தேதி சந்தேஷ்காலி கிராமப் பெண்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக வருகை தந்தனர். ஆனால், 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மாநில போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதில் போலீசாரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக தலைவர் சுக்கந்தா மஜூம்தார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களவைக் காங்கிரஸ் குழுவின் மாநில தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரிக்கு சந்தேஷ்காளியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசுயுள்ள ஆதி ரஞ்சன் சவுத்ரி, “மம்தா பானர்ஜி அபாயகரமான விளையாட்டை ஆடி வருகிறார். மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க செல்லும் எங்கள் மீது மாநில போலீஸ் கடுமையாக நடந்துகொள்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் இருமுனை அரசியலை செய்து வருகிறது பாஜக. மத்திய அரசு மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாது. முதலில், இதைப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டும்” எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
தேர்தல் நேரத்தில் இதைக் கையில் எடுத்து பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. மாநில ஆளுநர் அனந்த போஸ் போராட்டக்காரர்களைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பிய பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 6 பாஜக உறுப்பினரகள் நடப்புக் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டமன்றத்தில் பேசும்போது, “எனது வாழ்க்கையில் அநீதி நடக்க நான் அனுமதித்ததே இல்லை. மாநில பெண்கள் ஆணையத்தை அங்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். இந்த விவகாரத்தில் 17 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறை வைத்து ஷாஜகான் குறிவைக்கப்பட்டார். தற்போது, இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர்.
சந்தேஷ்காலி பகுதி ஆர்எஸ்எஸ் முகாமாக இருக்கிறது . இதற்கு முன்னரும் அங்கு கலவரம் நடந்துள்ளது. ’பெண் போலீசார் குழு’ வீடு வீடாக சென்று புகார் தெரிவிக்கிறார்களா என விசாரித்து வருகின்றனர். அவர்கள் யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம். மாநில பெண்கள் ஆணையத்தின் விசாரணையில் இதுவரை பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்” என விளக்கமளித்தார்.
சந்தேஷ்காலியில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகிறார். ஆனால், மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே உண்மை நிலை வெளிவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT