Published : 17 Feb 2024 06:27 PM
Last Updated : 17 Feb 2024 06:27 PM

சந்தேஷ்காலி வன்கொடுமை விவகாரம்: மேற்கு வங்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு கள ஆய்வு

புதுடெல்லி: குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறப்படும் சந்தேஷ்காலி கிராமத்தில், மேற்கு வங்க குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (WBCPCR) ஆறு பேர் கொண்ட குழு சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தலைமறைவான ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டம் நடைபெறுவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பட்டியலினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு அண்மையில் சந்தேஷ்காலி சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை அக்குழுவிடம் பெண்கள் எடுத்துரைத்தனர். ஷாஜகான் ஷேக்கை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, டெல்லி திரும்பிய பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் திரவுபதி முர்மு எந்த மாதிரியான முடிவை எடுக்க உள்ளார் என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் மேற்கு வங்க குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (WBCPCR) ஆறு பேர் கொண்ட குழு சனிக்கிழமை வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்கு சென்று புகார்களைக் கேட்டறிந்தனர். அப்போது, ஏழு மாதக் குழந்தையை மர்ம நபர்கள் தாயிடமிருந்து, பிடுங்கி எறிந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை விசாரிக்க அந்தக் குழு சென்றிருக்கிறது.

கள ஆய்வின் தொடர்ச்சியாக, மாநில குழந்தைகள் உரிமைக் குழுவின் ஆலோசகர் சுதேஷ்னா ராய் கூறுகையில், “தற்போதைய நிலையை கண்டறிய இந்த இடத்துக்கு வந்துள்ளோம். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பு அளிப்பது, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது எங்களுடைய கடமை. குழந்தையின் தாயைச் சந்தித்தோம். அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு தேவை. நாங்கள் அவர்களுக்கு அனைத்தையும் வழங்கியுள்ளோம்” என்றார்.

இதற்கிடையில், சந்தேஷ்காலி சென்று நிலைமையை ஆய்வு செய்வதற்காக கட்சியின் எம்.பி.க்கள் கொண்ட 6 உறுப்பினர் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். மத்திய அமைச்சர்கள் அன்னபூர்னா தேவி, பிரதிமா பவுமிக், எம்.பி.க்கள் சுனிதா துகல், கவிதா படிதார், சங்கீதா யாதவ், உ.பி. முன்னாள் டிஜிபி பிரிஜ்லால் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கம் சென்ற இக்குழுவினர் நேற்று சந்தேஷ்காலி புறப்பட்டனர். ஆனால் இவர்களை ராம்பூர் என்ற கிராமத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். சந்தேஷ்காலியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் பாஜக பிரதிநிதிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x