Published : 17 Feb 2024 05:44 PM
Last Updated : 17 Feb 2024 05:44 PM
மும்பை: மகாராஷ்டிராவின் பாராமதி மக்களவைத் தொகுதியில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவி சுனேத்ராவை நிறுத்தும் அஜித் பவாரின் வியூகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், "தொகுதி மக்களின் உணர்வுகளை சோதிக்க முயற்சிக்கிறார்" என்று கூறியுள்ளார்.
அஜித் பவாரின் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்த அடுத்த நாளில், வரும் மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் தன் சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவி சுனேத்ராவை நிறுத்தப் போவதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வெள்ளிக்கிழமை சூசகமாக தெரிவித்தார். அவரது இந்த வியூகம் குறித்து மூத்த தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒட்டுமொத்த குடும்பம் ஒரு பக்கமும், அவர் தனியாக எதிர்ப்பக்கவும் நிற்பதாக கூறி மக்களின் உணர்வுகளை சோதிக்க முயற்சிக்கிறார்.
ஜனநாயகத்தில் ஒவ்வொருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. யாராவது அந்த உரிமையைச் சரியாக பயன்படுத்தினால், அது பற்றி புகார் கூற எந்தவித காரணமும் இல்லை. கடந்த 55 - 60 வருடங்களில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று சரத் பவார் கூறினார்.
பாராமதி மக்களவைத் தொகுதி பாரம்பரியமாக சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேவின் கோட்டையாக விளங்கி வருகிறது. கடந்த 2009 முதல் தொடர்ந்து மூன்று முறை சுப்ரியா சுலே பாராமதி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
முன்னதாக, பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அஜித் பவார், "இந்த முறை புதிய வேட்பாளரைத் தேர்தெடுங்கள். சில உங்களிடம் வந்து உணர்ச்சிகரமான பிரச்சினைகளைக் கூறி வாக்கு கேட்பார்கள். ஆனால் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கா அல்லது உங்களின் எதிர்கால சந்ததிகளின் நலனுக்கான தொடர் வளர்ச்சி பணிகளுக்காக வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானியுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் அஜித் பவாரின் அணிதான் உண்மையான என்சிபி கட்சி எனத் தேர்தல் ஆணையம், தீர்ப்பளித்தது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக, கட்சியின் பெயர், சின்னம், கட்டுப்பாடு அனைத்தையும் அஜித் பவார் அணிக்கு அளித்தது.
இதனிடையே சரத் பவார், “கட்சியின் பெயர், சின்னம் போனது குறித்து தனக்கு கவலை இல்லை. வேறு பாதையில் செல்பவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ளவதில்லை. வளச்சிக்காக உழைக்க வேண்டி விட்டுச் சென்றதாக இவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT