Published : 17 Feb 2024 05:07 PM
Last Updated : 17 Feb 2024 05:07 PM
கொல்கத்தா: சிலிகுரி உயிரியல் பூங்காவில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி மனு தாக்கல் செய்துள்ளது.
திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக தற்போது விஸ்வ ஹிந்து பரிஷத் என்று இந்து அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத், சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அந்த மனுவில், "மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம். மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர்' உடன் 'சீதா'வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது" என்று கோரியுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள விஹெச்பி தலைவர் துலால் சந்திர ரே என்பவர் கூறுகையில், "சிங்கத்துக்கு சீதா என்று பெயரிடப்பட்டு இந்து மதத்தை அவமதித்துவிட்டனர். அத்தகைய பெயரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT