Published : 17 Feb 2024 10:27 AM
Last Updated : 17 Feb 2024 10:27 AM

சோனியாவுக்கு சொந்தமாக கார் இல்லை: வேட்பு மனுவில் தகவல்

சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். வயது மூப்பு காரணமாக நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்துகள் குறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாக சோனியா காந்தி தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் தனக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் வரை அதிகரித்துள்ளது. மேலும் தனக்கு இத்தாலி நாட்டில் தனது தந்தை வழிமூலம் ரூ.26 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவரிடம் 1,267 கிராம் எடையிலான தங்க நகைகள், 88 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன. டெல்லியின் தேரா மந்தி பகுதியில் 2,529 சதுர மீட்டர் பரப்பளவில் வேளாண் நிலம் உள்ளது. இது சந்தை மதிப்பில் ரூ.5.88 கோடி என்று தெரியவந்துள்ளது.

மேலும் வங்கி டெபாசிட்கள் மூலம் வட்டி, ராயல்டி வருவாய், மக்களவை உறுப்பினர் என்ற முறையில் சம்பளம், மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருவாய் என பலவகைகளில் தனக்கு வருவாய் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெங்குயின் புக் இந்தியா, ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், ஆனந்தா பப்ளிஷர்ஸ், கான்டினென்டல் பப்ளிகேஷன்ஸ் மூலம் ரூ.1.69 லட்சம் ராயல்டி தொகையாக வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சோனியா தனது கல்வித் தகுதிகளையும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் 1964-ல் இத்தாலியின் சியானாவில் உள்ள இஸ்டிடுடோ சாண்டா தெரசாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மூன்றாண்டு படிப்பை முடித்துள்ளார். 1965-ல் கேம்பிரிட்ஜில் உள்ள லெனாக்ஸ் குக் பள்ளியில் ஆங்கிலத்தில் ஒரு படிப்பையும் படித்துள்ளார் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x