Published : 17 Feb 2024 05:59 AM
Last Updated : 17 Feb 2024 05:59 AM
மும்பை: மராத்தா பிரிவினரின் சமூக மற்றும் பொருளாதார நிலைமை குறித்த அறிக்கையை மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் நேற்று சமர்ப்பித்தது. மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அச்சமூகத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அச்சமூகத்தின் சமூக, பொருளாதார நிலைமையை ஆராய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து,மராத்தா சமூகம் குறித்த அறிக்கையை ஆணையம் தயாரித்தது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் சுனில் சுக்ரே நேற்று அந்த அறிக்கையை சமர்ப்பித்தார். கல்வி, வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பாக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் மராத்தா தலைவர் ஜரங்கே பாட்டீல் கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வரும் 20-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மராத்தா சமூகத்தின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமை குறித்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT