Published : 17 Feb 2024 06:27 AM
Last Updated : 17 Feb 2024 06:27 AM

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நன்கொடையும் பெறவில்லை: பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கட்சிகள் மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என்று பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலம்நாட்டில் உள்ள பாஜக, காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிக அளவில் நன்கொடை பெற்றதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என்று பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.20,000-க்கும் மேல் எந்தவொரு நன்கொடையையும் பெறவில்லை. மேலும் கட்சி பெற்று வரும் நன்கொடைகள் தொடர்பான விவரத்தை கடந்த 17 ஆண்டுகளாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துவருகிறது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக வெளியான செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. தொடக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதேர்தல் பத்திரம் மூலம் வரும்நிதியை ஏற்க மறுத்து வருகிறது. எனவேதான், ஸ்டேட் வங்கியில் இதற்காக எந்த கணக்கையும் தொடங்கவில்லை. இதன் காரணமாகவே, தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தேர்தல் பத்திரம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதுஎன்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியை திட்டமிட்டு களங்கப்படுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டதாகும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x