Published : 17 Feb 2024 07:25 AM
Last Updated : 17 Feb 2024 07:25 AM
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு உள்ளது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணிப்பூரில் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டுமே மாதம் மோதல் ஏற்பட்டது.இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 65,000பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சுமார் 6,000-க்கும்மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த காவலர் ஒருவர்,ஆயுத குழுக்களுடன் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்தகாவலரை, மணிப்பூர் சுராசாந்துபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 400 பேர் சுராசாந்துபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மீது நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுராசாந்துபூர் பகுதியில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு, பதற்றமான சூழல் எழுந்துள்ளது.
பழங்குடி தலைவர்கள் கூட்டமைப்பான ஐடிஎல்எப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சுராசாந்துபூர் மாவட்ட எஸ்பி சிவானந்த்ஒருதலைபட்சமாக செயல்பட்டு காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் பழங்குடியின பகுதிகளில் சிவானந்த் பணியாற்ற அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடிஎல்எப் சார்பில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்காரணமாக மணிப்பூரில் குகி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறும்போது, “மணிப்பூர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க சதி நடைபெறுகிறது. இதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT