Published : 16 Feb 2024 09:10 PM
Last Updated : 16 Feb 2024 09:10 PM
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. இதற்கு பாஜக உட்பட அனைத்துல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இதனால், இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் தொகுதி மறுசீரமைக்குப் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அதற்கு தமிழக பாஜக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. கட்சிக்குள் முரண்பாடு எழும் அளவுக்கு தொகுதி மறுசீரமைப்பில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?
தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன? - மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைப்பு செய்வதே தொகுதி மறுசீரமைப்பு எனப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதே, இந்த மறுசீரமைப்பின் முதன்மை நோக்கமாக உள்ளது.
எதிர்க்கக் காரணம் என்ன? - இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில், நெருக்கடி நிலையின்போது, நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தென்னிந்தியா தீவிரமாகப் பின்பற்றியது. இதனால், தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
ஆனால், போதிய வளர்ச்சியும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் இல்லாத, வட மாநிலங்களின் மக்கள் தொகை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகிறது.
இதனால், அதிக மக்கள் தொகை கொண்டுள்ள உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள், தொகுதி மறுவரையறையின்போது கூடுதல் தொகுதிகளைப் பெறும். ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இந்த முரண்பாடு எழுந்தால், நாடாளுமன்றத்தில், தென்னிந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: இதனால், ‘தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில், எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில், சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் வலியுறத்துகின்றன.
தென்னிந்தியாவுக்கு ஏன் இந்த அச்சம்? - உத்தர பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் எல்லை நிர்ணயக்கப்பட்டால், 11 இடங்கள் அதிகரித்து 91 தொகுதிகளாகும். அதே வேளையில், தமிழகத்தில் 39 ஆகவுள்ள தொகுதிகள் 31 ஆகக் குறையக்கூடும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டும் சேர்த்து தற்போது, 42 இடங்களைக் கொண்டுள்ளன. அது 34 ஆகக் குறையும். அதேபோல், கேரளாவின் பலம் 20-ல் இருந்து 12 ஆகக் குறையும். கர்நாடகா 28-ல் இருந்து 2 இடங்களை இழக்கும்.
தற்போது, அதிக தொகுதிகள் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் -11, பிஹாரில் – 10, ராஜஸ்தானில் – 6 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் – 4 என எண்ணிக்கை அதிகரிக்கும். இப்படியாக, இந்தியாவின் நான்கு வட மாநிலங்கள் 22 தொகுதிகளைக் கூடுதலாகப் பெறும். நான்கு தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும்.
இதனால், இந்திய அரசியலிலும் ஆட்சியதிகாரத்திலும் இந்தி பேசும் மாநிலங்களின் செல்வாக்கு ஓங்கியிருக்கும் நிலையில், அது மேலும் வலுப்பெறும். தென்னிந்திய மாநிலங்களின் இடம் மேலும் பலவீனமாகும்.
தற்போது,மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 545. 1976-ல், எல்லை நிர்ணய நடவடிக்கையை 2000 வரை அரசு நிறுத்தி வைத்தது. ஆனால், 2001-ல், அந்தத் தடை 2026 வரை நீட்டிக்கப்பட்டது. தப்போது கொண்டுவர முயற்சிக்கப்படும் எல்லை நிர்ணயம் 2026-க்குப் பின், மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்தப் பிறகு மேற்கொள்ளப்படலாம்.
தமிழக தீர்மானம் மாற்றத்தை நிகழ்த்துமா? - தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்திருப்பது மாற்றத்தைத் தந்திவிடுமா என்பது தெரியவில்லை. ஆனால், மாநில உரிமைகள், இந்தி திணிப்பு என பிரச்சினைகளுக்குத் தமிழகத்திலிருந்துதான் முதல் கலகக் குரல் ஒலித்திருக்கிறது. இது மற்ற தென்னிந்திய மாநிலங்களை விழித்துக் கொள்ளச் செய்யும் முயற்சியாகப் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT