Published : 16 Feb 2024 06:58 AM
Last Updated : 16 Feb 2024 06:58 AM
புதுடெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி குவிமாடத்தை இடித்தவருக்கு பாஜகவில் மாநிலங்களவை எம்.பி.பதவி அளிக்கப்பட்டுள்ளது. 1992-ல் இது தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு தற்போது மகாராஷ்டிராவில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு முன் அங்கிருந்த பாபர் மசூதி, கடந்த 1992 டிசம்பர் 6-ல் விஎச்பி நடத்திய கரசேவையில் இடிக்கப்பட்டது. இக்காட்சி அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில், பாபர் மசூதி குவிமாடத்தை இடித்த கரசேவகர்களில் ஒருவர் டாக்டர் அஜித் கோப்சடே என தெரியவந்தது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. இதில் அஜித் கோப்சடே பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பாபர் மசூதி குவிமாடத்தில் அஜித் நிற்கும் பழைய படம் வைரலாகி வருகிறது.
மகராஷ்டிராவின் பீட் மாவட்டம், கோல்ஹே பர்காவ்ன் கிராமத்தை சேர்ந்த அஜித், 1992-ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தனது இளம் வயது முதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தொடங்கிய ரத யாத்திரையில் கலந்துகொண்ட அஜித், பாபர் மசூதியின் குவிமாடத்தை இடித்த இளைஞர்களில் ஒருவராக இடம்பெற்றார்.
இந்தப் படக்காட்சியுடன் இன்ஸ்டாகிராமில் அஜித் கடந்த ஜனவரி 22-ல் வெளியிட்ட பதிவில், “ராம் லல்லாவுக்கு கிடைத்துள்ள மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் கரசேவையில் பங்குகொண்ட நான் பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மே 2020-ல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அஜித் வாய்ப்பு கேட்டிருந்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு அளிக்கப்பட்டது. எனினும் மாநில மருத்துவப் பிரிவின் தலைவராக தொடர்ந்த அஜித்துக்கு தற்போது வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அஜித், கர்நாடகாவில் அதிகமுள்ள லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக அச்சமூகத்தின் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என பாஜக நம்புகிறது. கரசேவையில் கலந்துகொண்ட அஜித்தை போல், ராமர்கோயில் கட்டும் பணிக்கு முக்கியப் பங்காற்றியவர்களையும் பாஜக கவுரவித்திருப்பது தெரியவந்துள்ளது.
ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை தொடங்கி ஆதரவு திரட்டிய முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவராக இருப்பினும் பாபர் மசூதி இடிப்பைதடுப்பதில் சுணக்கம் காட்டி ராமர்கோயில் கட்ட பாதை வகுத்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உ.பி. முதல்வராக இருந்தகல்யாண் சிங்கிற்கு அவரதுமறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT