Published : 15 Feb 2024 08:59 PM
Last Updated : 15 Feb 2024 08:59 PM
'தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் வரவேற்று வருகின்றனர். தேர்தல் பத்திரம் திட்டம் என்றால் என்ன? உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியது என்ன? தீர்ப்புக்கு கட்சிகள் ரியாக்ஷன் என்ன? - முழுப் பின்னணியைப் பார்ப்போம். “தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்குப் பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் நடைமுறை சட்ட விரோதமானது” என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை பலர் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன? - தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வழிமுறையாகும். இந்தத் தேர்தல் பத்திரத்தை இந்தியாவிலுள்ள எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து பெறலாம். அதன் வாயிலாக, அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம்.
எப்போது அமல்படுத்தப்பட்டது? - மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை 2017-ம் ஆண்டு அறிவித்தது. அதை 2018-ம் ஆண்டில் சட்டபூர்வமாக செயல்படுத்த தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்களவைத் தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.
இருப்பினும், இந்த முறையில் பெறும் நன்கொடை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்கத் தேவையில்லை என அரசு திட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ’இதனால் பலரும் இந்தத் தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பும் வழங்கியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? - தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், தேர்தல் நிதி தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக இருப்பது அவசியம். இதனை வெளிப்படையாக தர மறுப்பது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த 2019-ம் ஆண்டு முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும. இந்தத் தகவலை வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரத்தில் உள்ள சிக்கல் என்ன? - தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கும் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது கருப்புப் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பெரிய தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நிதி வழங்க இந்தத் திட்டம் வழி வகுக்கிறது. இப்படியான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தனர்.
கட்சித் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன? - இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என மாண்பமை உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்திடும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது” என வரவேற்றுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான திட்டமாக தேர்தல் பத்திரங்களைப் பாஜக மாற்றியது. உச் சநீதிமன்ற தீர்ப்பால் இது தடைபடும். மோடியின் ஊழல் கொள்கைக்கான ஆதாரமே இந்தத் தேர்தல் பத்திரம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்த் துபே, “தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளும், அரசும் எங்கிருந்து நிதி பெறுகின்றன என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். இத்தனை நாட்களாக அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது மிகப் பெரிய தீர்ப்பு” என வரவேற்று பேசியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மோடி அரசால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் நாடாளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பு, பணத்துக்கு எதிராக நமது வாக்குகளின் அதிகாரத்தை வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை வரவேற்று பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் சமத்துவம், நியாயம், ஜனநாயகம் ஆகிய ஒவ்வொரு கொள்கையையும் மீறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடையால் மட்டுமே 90% பாஜக வளர்ந்திருப்பது அம்பலமாகும். யார் பணம் கொடுத்தார்கள், எப்போது பணம் கொடுத்தார்கள், எந்தக் கட்சிக்கு கொடுத்தார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வீ, “எந்தத் தீர்ப்பு வந்தாலும் அதை அரசு ஆய்வு செய்து, நாட்டு நலனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை: புள்ளிவிவரங்களின்படி, கடந்த 6 ஆண்டுகளில் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம்:
பாஜக - ரூ.6,570 கோடி
காங்கிரஸ் - ரூ.1,123 கோடி
பிஆர்எஸ் - ரூ.912 கோடி
திரிணமூல் காங். - ரூ.823
பிஜு ஜனதா தளம் - ரூ.774
திமுக - ரூ.616 கோடி
ஒய்எஸ்ஆர் காங். - ரூ.381 கோடி
மார்க்சிஸ்ட் - ரூ.367 கோடி
தேசியவாத காங். - ரூ.231 கோடி
பகுஜன் சமாஜ் - ரூ.85 கோடி
இந்திய கம்யூ. - ரூ.13 கோடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT