Published : 15 Feb 2024 07:41 PM
Last Updated : 15 Feb 2024 07:41 PM
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் தொகுதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு புதன்கிழமை மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி. இதனால், அவர் தற்போது எம்பியாக உள்ள ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல் சொல்லப்பட்டு வருகிறது. அதன் பின்னணி என்ன?
15 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார்கள், பிப்ரவரி 27-ம் தேதி இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆகும். தற்போது, மாநிலங்களவையில் பாஜகவுக்கு 93 எம்பிக்களும், காங்கிரஸ் கட்சியிலிருந்து 30 எம்பிக்களும், திரிணமூல் காங்கிரஸிலில் இருந்து 13 எம்பிக்களும், 6 நியமன உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில்தான், சோனியா காந்தி ஜெய்ப்பூர் மாநிலங்களவைத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
முடிவுக்கும் வரும் 25 ஆண்டுகால தேர்தல் அரசியல்! - கடந்த 25 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு களத்தில் செயல்பட்ட சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட திட்டமிட்டுருக்கிறார். ஒருவேளை, மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் காந்தி குடும்பத்தில், மாநிலங்களவைக்குள் நுழையும் இரண்டாவது நபர் என்னும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு, இந்திரா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக 1964 - 1967 காலக்கட்டத்தில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.
சோனியா காந்தி, 1999-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டார். 2004-ம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நடந்த எல்லா தேர்தல்களிலும் அந்தத் தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்கிறார்.
சோனியா இடத்தில் பிரியங்கா! - உடல்நலவுக் குறைவு, வயது மூப்பு காரணமாக மாநிலங்களவைக்குச் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக சோனியா காந்தியிடம் இருந்த ரேபரேலி தொகுதியில் அவர் மகள் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என தகவல் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி, சோனியா காந்திக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. அது உண்மையானால், தன் தேர்தல் அரசியலை பிரியங்கா இங்கிருந்துதான் தொடங்குவார்.
’சோனியா காந்திக்கு அடுத்ததாக ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்துவார்’ என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், 2019-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததை அடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் பிரியங்கா காந்திக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என கருத்துகள் சொல்லப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுனா கார்கே முன்னிறுத்தப்பட்டார்.
ஆனால், தற்போது சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு செல்ல நினைப்பது அவர் அரசியல் திசையை மாற்றும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்க நினைக்கிறார் சோனியா காந்தி என்னும் கருத்துகளும் அடிபடுகிறது. ரேபரேலி தொகுதில் பிரியங்கா களமிறக்கப்பட்டால், கட்சியில் சோனியாவுக்குப் பின் பிரியங்கா காந்தி என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT