Published : 15 Feb 2024 02:34 PM
Last Updated : 15 Feb 2024 02:34 PM

தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய படையினர் தேவை: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் மற்றும் அதனோடு சேர்ந்து நடைபெற உள்ள சில சட்டமன்றங்களின் தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய பாதுகாப்புப் படையினரை பணியமர்த்த மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலும், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்படும் பாதுகாப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "மொத்தம் 3,400 கம்பெனி துணை ராணுவப் படையினர், அதாவது 3.40 லட்சம் துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புக்குத் தேவை.

மேற்கு வங்கத்துக்கு 920 கம்பெனி துணை ராணுவப்படையினர், ஜம்மு காஷ்மீருக்கு 635 கம்பெனி துணை ராணுவப்படையினர், சத்தீஸ்கருக்கு 360 கம்பெனி துணை ராணுவப்படையினர், பிஹாருக்கு 295 கம்பெனி துணை ராணுவப்படையினர், உத்தரப் பிரதேசத்துக்கு 252 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேவை.

இதேபோல், ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாபுக்கு தலா 250, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூருக்கு தலா 200 துணை ராணுவப்படையினரை அனுப்ப வேண்டும். ஒடிசாவுக்கு 175 கம்பெனி துணை ராணுவப்படையினரும், அஸ்ஸாம் மற்றும் தெலங்கானாவுக்கு 160 துணை ராணுவப் படையினரும் தேவை.

மகாராஷ்டிராவுக்கு 150, மத்தியப் பிரதேசத்துக்கு 113, திரிபுராவுக்கு 100, ஹரியானாவுக்கு 95, அருணாச்சலப் பிரதேசத்துக்கு 75, கர்நாடகா, உத்தராகண்ட், டெல்லிக்கு தலா 70 கம்பெனி துணை ராணுவப்படையினரை பாதுகாப்புக்காக அனுப்ப வேண்டும். கேரளாவுக்கு 66, லடாக்குக்கு 57, இமாச்சலப் பிரதேசத்துக்கு 55, நாகாலாந்துக்கு 48, மேகாலயாவுக்கு 45, சிக்கிமுக்கு 17, மிசோரமுக்கு 15, தாத்ரா நாகர் ஹவேலிக்கு 14, கோவாவுக்கு 12, சண்டிகருக்கு 11, புதுச்சேரிக்கு 10, அந்தமான் நிகோபாருக்கு 5, லட்சத்தீவுக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படையினரை தேர்தல் பாதுகாப்புக்காக அனுப்ப வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. துணை ராணுவப் படையினரின் இருப்பை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் இந்த கோரிக்கை மீது மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x