Published : 15 Feb 2024 01:27 PM
Last Updated : 15 Feb 2024 01:27 PM

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வாக்குகளின் அதிகாரம் வலுக்கும்” - காங். @ தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, “பணத்துக்கு எதிரான வாக்குகளின் அதிகாரத்தை இது வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் நாடாளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் தீர்ப்பு, பணத்துக்கு எதிராக நமது வாக்குகளின் அதிகாரத்தை வலுப்படுத்தும். நீண்ட காலமாக இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டது. நமது ‘அன்னதாதா’களுக்கு (விவசாயிகளுக்கு) அநீதிக்கு மேல் அநீதி இழைக்கும் மோடி அரசு, ‘நன்கொடையாளர்’களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் விலக்குகளை அளித்து வருகிறது.

அதேபோல், விவிபாட் (VVPAT) தொடர்பாக அரசியல் கட்சிகளை சந்திக்கக் கூட தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். வாக்களிக்கும் முறையின் அனைத்து விஷயங்களும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் ஏன் பிடிவாதமாக இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேர்தல்கள் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று தமிழக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் முறைஉள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

வழக்கு பின்னணி: கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு குறித்த முழு விவரம்: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x