Published : 15 Feb 2024 12:39 PM
Last Updated : 15 Feb 2024 12:39 PM
புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணியாகச் சென்ற விவசாயிகள் பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு 3வது நாளாக போராட்டத்தினைத் தொடரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாரதிய கிஷான் யூனியன் (உக்ரஹான்) மற்றும் பிகேடி தகவுன்டா (தனேர் ஃபேக்ஷன்) அமைப்புகள் இன்று(வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தினை அறிவித்துள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கிச் செல்லும் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர். ஆனால் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் அவர்களை போலீசார் ஹரியாணா எல்லையிலேயே தடுத்தனர். இதற்காக ஹரியாணா எல்லையில் சிமெண்ட் தடுப்புகள், முள்வேலி படுக்கைகள், துணைராணுவத்தினர், போலீஸார் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகிக்கின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் - ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் நடந்து வரும் போராட்டம் 3 வது நாளை எட்டியுள்ளது. அங்கு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரதான விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 37 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சாவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
ரயில் மறியல் போராட்டம்: இந்த விவசாய அமைப்புகள் கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தன. விவசாயிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாயிகள் மீதான போலீஸாரின் தாக்குதலை கண்டித்துள்ள பிகேயு (உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரி கலான் கூறுகையில்," நாங்கள் அவர்களுடன் (விவசாயிகளுடன்) ஒற்றுமையாக நிற்கிறோம். அதனை நிரூபிக்கும் வகையில், எங்களால் முடிந்த அனைத்து இடங்களிலும் ரயில் மறியில் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் அமைப்பினர் பஞ்சாப்பில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் நடத்துவர்" என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை (பிப்.16) நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3வது கட்ட பேச்சுவார்த்தை: இந்த நிலையில், விவசாய சங்கத்தினருடன் மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு 3வது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறது. மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் மாலை 5 மணிக்கு சண்டிகரில் கூடி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் நடக்க இருக்கும் மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை இது. முன்னதாக, பிப்.8 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தைகள் தீர்வு எட்டப்படாமல் நிறைவடைந்தன.
கடந்த இரண்டு நாட்களாக டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளின் பேரணியைத் தடுத்து நிறுத்த ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்களின் தாக்கத்தினைக் குறைக்க விவசாயிகள் தண்ணீர் பாட்டில்கள், ஈர உடைகள், கண்ணீர் புகை குண்டு பாதிப்புகளைக் குறைக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தினர். குண்டுகளைச் சுமந்துவரும் ட்ரோன்களைத் தடுக்க விவசாயிகள் பட்டங்களைப் பறக்க விட்டனர். இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தினை முன்னிட்டு தேசிய தலைநகர் கடும் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்திய இடைநிலை தேர்வு வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வுகளுக்கு வர தங்களின் பயணத்தை முன்கூட்டியே தீர்மானிக்குமாறு நேற்றிரவு அறிவுறுத்தி இருந்தது. அது மாணவர்களை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT