Published : 15 Feb 2024 10:39 AM
Last Updated : 15 Feb 2024 10:39 AM

ஹல்துவானி வன்முறை | 7 நாட்களுக்குப் பிறகு வன்புல்புராவில் ஊரடங்கு தளர்வு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம், ஹல்துவானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வன்புல்புரா பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த பிப்.8ஆம் தேதி முஸ்லிம்கள் அதிகம் வாழும் மல்லீக் தோட்டம் எனும் இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. ஹல்துவானி முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நைனிதால் முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 10ஆம் தேதி தளர்த்தப்பட்டது. எனினும், பதற்றம் அதிகமாக இருந்த வன்புல்புராவில் மட்டும் 144 தடை ஊரடங்கு உத்தரவு நீடித்து வந்தது.

இந்த நிலையில் மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில், கவுஜாஜலி, ரயில்வே பஜார், எஃப்சிஐ குடோன் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது. வன்புல்புராவின் மற்ற பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டும் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x