Published : 15 Feb 2024 05:45 AM
Last Updated : 15 Feb 2024 05:45 AM

விவசாயிகள் போராட்டத்தால் 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு

பாட்டியாலாவுக்கு அருகே பஞ்சாப்-ஹரியாணா ஷம்பு எல்லையில் 2-வது நாளாக நேற்று போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கும் போலீஸார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் 2-ம் நாளாக நேற்றும் ஒன்று திரண்ட விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையாமல் தடுப்பதற்காக, ஹரியாணாவின் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார் ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், டாங்கிள் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நேற்றும் ஒன்று திரண்டு டெல்லி மாநகருக்குள் நுழைய முயன்றதால் போலீஸார் பல்வேறு தடுப்புகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, காஜிபூர் எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் விவசாய சங்க தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பேச்சுவார்த்தை: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில்இன்று சண்டிகரில் பேச்சுவார்த்தைநடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதுவரையில், போராட்டத்தை முன்னெடுக்காமல் அமைதிகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கலந்து கொள்ள உள்ளதாக விவசாய சங்க தலைவர் சர்வண் சிங் பாந்தர் நேற்று தெரிவித்தார்.

ராகுல் ஆறுதல்: விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியின்போது நேற்று முன்தினம் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விவசாயிகளின் கூட்டத்தை போலீஸார் கலைத்தனர். இதில், குர்மீத் சிங் என்ற விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x